தமிழ் திரை உலகில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் காமெடி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் மன்சூர் அலிகான். முதன்முதலில் விஜய்யின் "மாண்புமிகு மாணவன்" திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார் மன்சூர் அலிகான்.
அதன்பின்னர் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்தவர் பிறகு காமெடி கலந்த வில்லனாக நடிக்க தொடங்கினார். அதன்பிறகு முழுமையாக காமெடி நடிகராக ஆகிவிட்டார்.
ஜாக்பாட், சிலுக்குவார் பட்டி சிங்கம், செம மற்றும் பல திரைப்படங்களில் அவர் செய்த காமெடிகள் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தன.
2018 ஆம் ஆண்டு எட்டு வழி சாலையை எதிர்த்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
அதன் பிறகு 2021ஆம் ஆண்டு நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திய காரணத்தினால் மட்டுமே மரணமடைந்தார் எனவும் இதற்கு காரணமான மருத்துவர்கள் பதிலளிக்க வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டு மறுபடியும் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதுபோல பல்வேறு சர்ச்சைகளில் ஈடுபட்டுவரும் மன்சூர் அலி கான் மீது புதிதாக ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.
சென்னை சூளைமேடு பகுதியில் பெரியார் பாதையில் வசித்து வருகிறார் நடிகர் மன்சூர் அலிகான். தற்போது சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மன்சூர் அலிகான் வீட்டிற்கு சீல் வைத்து இருப்பது அதிர்ச்சி வலையாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அரசு புறம்போக்கு இடத்தை 2500 சதுர அடி வளைத்து வீடு கட்டியதால் தான் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.