இந்தித் திணிப்பிற்கு எதிராகப் போராடி போலீசால் குண்டடிப்பட்டும் தீக்குளித்தும் நஞ்சருந்தியும் உயிர்த்தியாகம் செய்தும்., தமிழையும் தமிழ்நாட்டையும் காத்த மொழிப்போர் தியாகிகளின் 58வது ஆண்டு இது !
நூற்றுக்கணக்கானோர் உயிர்த்தியாகம் செய்து காப்பற்றப்பட்ட தமிழும் தமிழ்நாடும் இப்போது எப்படி இருக்கிறது? திரும்பிய பக்கமெல்லாம் இந்தியும் ஆங்கிலமும் புரையோடிக் கிடக்கிறது.
ஆரிய - பார்ப்பன வேத எதிர்ப்பையே உயிர் நாடியாகக் கொண்ட தமிழ்ப்பண்பாட்டை சிதைப்பதற்குத்தான் மோடியின் திருக்குறள் மீதான பாசம்! பிறப்பால் எல்லோரும் சமம் என்ற திருக்குறளுக்கு, சாதி ஷேமகரமானது என்ற பார்ப்பனீய சாயத்தை பூசுகிறார்கள்.
காசி தமிழ்ச்சங்கமம் என்ற பெயரில் புல்லுருவிகளையும் தமிழ்த் துரோகிகளையும் வளர்க்கிறது மோடி - அமித்ஷா பாசிசக்கும்பல். சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ் தோன்றியதாக கதைவிட்டு, தமிழ் வரலாற்றை திரித்து எழுத முயல்கிறது பார்ப்பன நரிக்கூட்டம். என்ன தகிடுதத்தம் செய்து பொய்வரலாற்றை எழுதினாலும் சரி, தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் ஒவ்வாதவைதான்! சமஸ்கிருதமும் பார்ப்பனீய பண்பாடும்.
சி.பி.எஸ்.இ பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாகக்கூட எடுத்துப்படிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அரசுப்பள்ளிகளில் கூட தமிழ் வழிப்பாடங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு ஆங்கிலவழிப் பள்ளிகளாக படிப்படியாக மாற்றமடைந்துக் கொண்டிருக்கின்றன.
தமிழே தெரியாமல், படிக்காமல் ஒருவர் எல்.கே.ஜி முதல் முனைவர் பட்டம் வரை வாங்கி விடலாம் என்ற இழிநிலைதான் தமிழ்நாட்டில் இருக்கிறது.
இந்த கேவலமான நிலைக்குத்தான் கீழப்பழுவூர் சின்னச்சாமி . திருச்சி ரயில் நிலைய வாசலில் தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டாரா? " தமிழ் வாழ்க, அத்தி ஒழிக என்று முழங்கி உயிர் நீத்தாரா?
இந்தி நிலைக்குழுவான அமித்ஷா குழு, வங்கிகளிலும் தயில்வேயிலும் இரம்பி வழிகிறது இந்தி ஆதிக்கம். கடந்த எடப்பாடி ஆட்சியில் தமிழ்நாடு மின்வாரியத்திலும் கூட வட இந்தியர்கள் சேர்க்கப்பட்டனர்.
மத்திய ஆயுதப்படைக்கு இந்தியில் மட்டுமே தேர்வு நடத்தப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசுப்பணிக்கு இந்தி தெரிய வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.
அஞ்சலக பணிக்கு வட இந்தியர்கள் தமிழில் தேர்ச்சி பெறுகின்றனர், தமிழர்களோ தோல்வியடைகின்றனர். இப்படி கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இந்தி படிப்படியாக புகுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆக, தமிழ்நாட்டில் கருவறையிலும் தமிழ் இல்லை: கல்வியிலும் தமிழ் இல்லை.
இந்த அநீதிக்கு எதிராக 1965க்குப்பின் மிகப்பெரிய போராட்டம் வெடிக்காததால் துளிர் விட்டுப்போன ஒன்றிய அரசும் ஆர்.எஸ்.எஸ் கும்பலும் அவர்தம் அடிவருடிகளும் இந்தி படித்தால் தப்பில்லை என்று பேசிக்கொண்டு தமிழ்நாட்டிலேயே துணிவாகத் திரிகிறார்கள்.
தமிழ்நாட்டில், ஒன்றிய அரசுப்பணிகளில் திட்டமிட்டே வட இந்திய ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்டுகள் நிரப்பப்பட்டிருக்கிறார்கள்.
அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பார்ப்பனிய - வேத பண்பாட்டையும் மறுகாலனியாதிக்க நுகர்வு பண்பாட்டையும் மக்களிடம் திணிக்கிறார்கள்.
இதற்காகத்தான் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவன் ராஜேந்திரன் போலீசின் துப்பாக்கி குண்டுக்கு தன்னை பலி கொடுத்தாரா?
உலகிலேயே தாய்மொழியைக் காப்பதற்காக நூற்றுக்கணக்கானோர் உயிர்த்தியாகம் செய்தார்கள் என்றால் அது தமிழுக்காக மட்டும் தான். தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் ஆரிய - பார்ப்பனீயம் இன்னமும் முழுமையாக வெற்றி பெற முடியாத பன்னெடுங்காலப் போர் இது. இன்னுமொரு மொழிப்போர் வந்து விடக்கூடாதென்பதற்காகத்தான் ஒன்றிய அரசு பல்வேறு கட்டங்களாக, பல்வேறு வடிவங்களாக, மறைமுகமாக இந்தியை திணித்து வருகின்றது.
அன்று இந்தி எதிர்ப்பு பேசிய பலரும் பின்னர் ஒன்றிய அரசின் ஆட்சிப் பதவி சுகத்துக்காக விலை போய்விட்டனர். நாம் என்ன செய்வது ? அமைதியாக இந்த இழி நிலையை ஏற்றுக்கொண்டு மானங்கெட்டு வாழப்போகிறோமா இல்லை போராடப்போகிறோமா?
தஞ்சை டெல்டாவில் மீத்தேன் எடுப்பதற்கு எதிரான போராட்டம், ஸ்டெர்லைட் வேதாந்தாவுக்கு எதிரான போராட்டம் போன்ற கார்ப்பரேட் எதிர்ப்பு போராட்டங்களுக்கு தூண்டுகோலாக தமிழ்மொழியும் தமிழ்மண்ணும் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தேசிய இனமும் மொழியும் தங்கள் உரிமைகளுக்காகப் போராடினால் அது கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு எதிரானதாக மாறும் ஆகவே இந்தித்திணிப்பு காவி பாசிஸ்டுகளுக்கு மட்டுமல்ல; கார்ப்பரேட் பாசிஸ்டுகளுக்கும் ஒரு முக்கியத் தேவையாக இருக்கிறது.
மொழி உணர்வும் இன உணர்வும் மட்டுமே பாசிசத்தையோ கார்ப்பரேட்டுகளின் சுரண்டலையோ வீழ்த்திவிட முடியாது. மொழி, இன உணர்வுடன் பாட்டாளி வர்க்க உணர்வும் இணையும் போதுதான் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க; அம்பானி - அதானி பாசிசத்தை வீழ்த்த முடியும்.
இது ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க பாசிச கும்பலின் ஆட்சி, அம்பானி - அதானி கார்ப்பரேட் கும்பலின் ஆட்சி., இவர்களை வீழ்த்த வேண்டுமென்றால் மக்களாகிய நாம் பாசிச எதிர்ப்பு முன்னணியாக, ஒன்றிணைய வேண்டும்.
தேவை மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்புப்போர், அது ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க, அம்பானி - அதானி பாசிஸ்டுகளுக்கெதிரான போராட்டமாக இருக்க வேண்டும். இவர்கள் அரசுத்துறைகள், சாதி - மத நிறுவனங்கள் என அனைத்தையும் கைப்பற்றிக்கொண்டு ரவுடிகள், பொறுக்கிகள், சமூக விரோதிகள் போன்ற ஐந்தாம் படையை வைத்திருக்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க.. அம்பானி அதானி பாசிச கும்பல் நாளை தமிழ்நாட்டை கைப்பற்ற முயலும் போது தமிழ்நாட்டில் உள்ள இந்த ஐந்தாம் படையும் அவர்களுடன் இணைந்து நம்முடன் மோதும். தமிழ்நாட்டின் மீதும் இன்னொரு முள்ளிவாய்க்கால் போன்றதொரு போர் நடக்கும் ! தப்பிச்செல்வதற்கு இடமேதுமில்லை. அங்கே நந்திக்கடல், இங்கே வங்கக்கடல்,
நமது மண்ணில் ஊன்றி நின்று பாசிசத்தை வீழ்த்துவோம்! ஹிட்லர், முசோலினியின் வாரிசுகளுக்கு முடிவு கட்டுவோம் ! இந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகிகளை உயர்த்திப்பிடிப்போம் ! ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க: அம்பானி - அதானி பாசிசம் முறியடிப்போம் !

